உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிராபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் ” என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம், பேரறிவாளன் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக – பாஜக கூட்டணி அரசு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்க பரிந்துரைத்தது. தமிழ்நாடு அரசின் பரிந்துரை முன்னாள் பாஜக தலைவரும் அப்போதைய தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்திடம் அனுப்பப்பட்டது. அவர் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அவரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுகுறித்து முடிவெடுக்க ஆளுநர் தவறியதால் இன்று உச்சநீதிமன்றமே இவ்விவகாரத்தில் தலையிட்டு ஒருவரை விடுதலை செய்துள்ளது.
எனது கேள்வி சுலபமானது. பேரறிவாளன் விடுதலை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வருத்தமளிக்கிறது. முன்னாள் பிரதமர் ஒருவரை படுகொலை செய்த, பயங்கரவாதி என தீர்ப்பளிக்கப்பட்டவரை இப்படிதான் விடுதலை செய்வீர்களா? அப்படியென்றால் இந்த நாட்டில் சட்டத்தின் மகத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் யார் நிலைநாட்டுவார்கள்? பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் பதிலளிக்க வேண்டும். இது பயங்கரவாதம் குறித்து பேசும் பாஜக அரசின் நடிப்பா அல்லது இரட்டை நிலைப்பாடா? மௌனத்தின் மூலம் பிரதமரை கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க உடந்தையாக இருக்கிறீர்களா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.