உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தனது கருத்தை தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்றும் ஆளுநர் அவ்வாறு விலகினால் மட்டுமே பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.