திராவிட முன்னேற்றக்கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது என்றும் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். கடந்த 2 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். திராவிட ஆட்சி ஒரு கூடாரத்தை போன்று செயல்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 626 தீண்டாமை வழக்குகளில் 158 திருவாரூரில் பதிவானவை. சாதி அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் குறையாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
திமுகவை வீழ்த்துவது எளிது. திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று. அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது. திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். தொடக்க காலத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை உருவாக்கியதை போல தற்போது அக்கட்சி செயல்படுகிறது.
கோடைக்காலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள். எந்த நன்மை நடந்தாலும் திமுகவால் நடந்தது என்கிறார்கள். 1967 ஆம் ஆண்டுக்கு முன்பே பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், திமுகவால் தமிழ்நாடு சாதித்ததாக சொல்கிறார்கள். திமுகவை அழிப்பது எளிமையானது.
தற்போதைய ஆட்சியில் திருச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் குறுநில மன்னர்களைபோல் உள்ளார்கள். கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை திராவிட அரசு பாதுகாப்பாக வைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒரு மைல் கல்லாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டு பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம்போல் வரவுள்ளனர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாஜக ஆட்சியமைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.