மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்: சீமான்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தாயின் அரவணைப்பில் மேலும், கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கூடங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும், போராட்ட மேடைகளுக்கும் நடந்து, நடந்து தேய்ந்த அம்மா அற்புதம்மாளின் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும். சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தம்பி பேரறிவாளனுக்குக் கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.