முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனி நாடு கோரி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்த ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கு எதிரான 2009-ம் ஆண்டு இறுதி கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில்தான் தமிழ் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் ஈவிரக்கமற்ற சிங்கள அரசு அத்தனை தமிழர்களையும் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்தது. இன்னமும் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13-வது நினைவேந்தல் நிகழ்வு இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் ஈழத் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் முள்ளிவாய்க்கால் வந்தடைந்த தமிழர்கள் அங்கு நினைவு முற்றத்தில் ஈகைச் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2009-ம் ஆண்டு இறுதி காலத்தில் உயிரிழந்தோர் நினைவாக கஞ்சியும் வழங்கப்பட்டது.

இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிங்களரும் இணைந்து பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.