சாபத்திலிருந்து கொலையாளிகள் தப்ப முடியாது: அனுசுயா

ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா. தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியதாவது:-

ராஜிவ் கொலையை சி.பி.ஐ., விசாரித்து, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடத்தியது. விசாரணையில், பலர் குற்றவாளிகள் என, ஊர்ஜிதம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அவர்களுக்கு துாக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. பின், கருணை அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கோர்ட் நடைமுறைகள் அத்தோடு முடிந்து விட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் தற்போது, பேரறிவாளனை விடுவித்துள்ளது.

ஒரு கோர்ட், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்? ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும்.அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், ராஜிவ் உள்ளிட்ட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை, கோர்ட் விடுவிக்கும் என்றால், கோர்ட் நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை. இன்றைக்கு பேரறிவாளனை விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பரா? அப்படியென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் செய்தது தியாகமா?

கோர்ட் பார்வையின்படியே எடுத்து கொள்வோம். கோவையில் குண்டு வெடிப்பின் போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும், நீதியும் பொருந்துமா? எங்களை பொறுத்தவரை, ராஜிவ் கொலையாளிகளுக்கு, ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது. கோர்ட் விடுதலை செய்யலாம். ஆனால், ராஜிவ் கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜிவ் ஆன்மாவும் ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து, கொலையாளிகள் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.