ஜிஎஸ்டி கவுன்சில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலவே மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு துறைகள் மற்றும் சேவைகளில் ஜிஎஸ்டி வரி அமலில் இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்புகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் பரிந்துரை செய்யும். இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்தியா ஒரு கூட்டாச்சி ஒன்றியம் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.
இந்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிரான தீர்ப்பு மாநில அரசுகளுக்கு ஆதரவான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜிஎஸ்டி கவுன்சில் கொடுக்கும் பரிந்துரைகளை இனி கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு கிடையாது. அதோடு ஜிஎஸ்டி கவுன்சில் போடும் உத்தரவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மாநில உரிமைகளை காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால், ஒரு அமைப்பு மட்டும் கூடுதல் அதிகாரம் கொண்டு இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் எடுத்துள்ளது.