அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவி அம்மா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கியது. பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு வித்திட்டார் என்றால் சத்துணவு திட்டத்தை செயல்படுத்தி அதனை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது வழி வந்த அம்மா உயர் கல்வியை ஊக்குவித்தார்.
மருத்துவக் கல்வியை எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பெற்ற பெருமை அ.தி.மு.க. அரசையே சாரும். மருத்துவப் படிப்பிற்கென தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தான்.
பொறியியல் படிப்பை எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான், திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொறியியலுக்கு என்று பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.
சட்டப் படிப்பை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள 16 அரசு சட்டக் கல்லூரிகளில் திருச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, விழுப்புரம், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள எட்டு அரசு சட்டக் கல்லூரிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான், 2010-2011 ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை 2019-2020ல்’ 51.4 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கைப்படி 2030ம் ஆண்டு 50 விழுக்காட்டிற்கு மேல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென்ற நிலையில், அதனை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு எய்திவிட்டது என்றால், எந்த அளவுக்கு அ.தி.மு.க. கல்விக்கு, உயர் கல்விக்கு முன்னேற்றம் அளித்து இருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்றும், தற்போதைய ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் முதல்-அமைச்சர் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே கூறி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.