பணவீக்கம் அதிகரிப்பு, வேலை இல்லா பிரச்னை என இலங்கையை போன்ற நிலைைமை தான் இந்தியாவிலும் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற விஷயங்களில் ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற தனது தோல்விகளை மறைப்பதற்காக வேறு பிரச்னைகள் கிளப்பி விடப்படுகிறது. இது போன்று பிரச்னைகளை திசை திருப்பி விடுவதால் உண்மை நிலைமை மாறாது. இந்தியாவும் பெரும்பாலும் இலங்கை போன்ற நிலைமையில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜ அரசின் பொருளாதார கொள்கைகள் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கானதாகவோ அல்லது அவர்களுடைய செலவை குறைக்கும் வகையிலோ இல்லை. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் தினசரி செலவுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.