பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இது போன்ற தீர்ப்பு அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்பில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் குறித்தும் சில கருத்துகள் கூறப்பட்டு இருந்ததாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், அதனைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காக்கும் நீதிமன்றங்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப்பெரிய நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மாநில அரசின் உரிமைகளிலோ ஆளுநரின் அதிகாரங்களிலோ தமிழக அரசைத் தவிர நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. நீதியரசர் நாகேஸ்வர ராவ் முன்னர் விசாரணையின்போது கேட்ட விளக்கங்கள் எல்லாம் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்த கண்டனங்கள் போல் முதல்வர் தன் அறிக்கையில் பசப்பு கருத்துகளில் துளியும் உண்மையில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கோ ஆளுநருக்கோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக்கட்சிகள் இதையும் அரசியலாக்க முயல்வதில் வியப்பில்லை. ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை என்பது மக்களுக்குத் தெரியும்.
அப்படி மத்திய மாநில உரிமைகளைப் பற்றிய பெரிய புரிதல் இருப்பவர்கள் மத்திய அரசில் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திலும் திமுகவின் ஆட்சிதானே இருந்தது. 2006 முதல் 2011 வரை கருணாநிதி தானே முதலமைச்சர்? அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை. கருணாநிதிக்குப் பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா? அல்லது கருணாநிதியை விடத் தான் அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா? பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 142ன் படி தன் உச்சபட்ச சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. திமுகவைப் பொறுத்தவரைக் காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. பரந்துபட்ட பாரத தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் எந்தவித சமரசமும் இல்லாமல் உறுதி செய்யும் உயர்ந்த இடத்தில் உச்ச நீதிமன்றம் இருப்பதை நன்கு உணர்ந்த நீதிபதிகள் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பைத் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.