பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பாராட்டி வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பேரறிவாளன் விடுதலை ஆகியிருக்கும் நிலையில், அதே கால அளவில் சிறையில் உள்ள நளினி உள்பட மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைத்திட வழி பிறக்கும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போட்டு வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு இதுவரை இயற்றியுள்ள சட்டங்களுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான அதிகார சிக்கலுக்கு தீர்வினை இந்த தீர்ப்பு அளித்துள்ளது.
பேரறிவாளன் எஞ்சியுள்ள வாழ்நாளை அமைதியாக கழிக்கும் வகையில் அவருக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு கருணை கூர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.