முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் (அ.தி.மு.க.) நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கூடுதல் தேவைகளைப் பற்றி நான் கேட்டறிந்தேன். அங்குள்ள மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை பற்றிய விபரத்தை இந்தக் கடிதத்துடன் இணைத்து கொடுத்துள்ளேன். அந்த மருத்துவமனைக்கு அவர்களின் நியமனம் உடனடி தேவையாக உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த மருத்துவமனைக்கான அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும். நோயாளிகளின் விபரங்களை பதிவு செய்ய 15 கம்ப்யூட்டர்கள், உணவு கொண்டு செல்லும் வண்டிகள், புதிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் பல உபகரணங்கள் அங்கு அளிக்கப்பட வேண்டும். லேப் டெக்னீஷியன், ரேடியாலஜி படித்த டாக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர், மருந்தக பணியாளர்களை அங்கு கூடுதலாக பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.