சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா ரஜோரி மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, “சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் 3 படுகொலைகள் நடந்துள்ளது. சட்டப்பிரிவு 370 தொடர்பான விவகாரத்தில் எங்கள் கருத்துக்களை கோர்ட்டில் எடுத்துரைப்போம். சட்டத்தை நாங்கள் எங்கள் கைகளில் எடுக்கமாட்டோம். நாங்கள் வேறொரு நாட்டின் மொழியைப் பேசுபவர்கள் அல்ல” என்றார்.