போர்க் கப்பல் தகர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!

போர்க் கப்பல்களை தகர்க்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஏவுகணையை, இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நேற்று முன்தினம் ‘ஐ.என்.எஸ்., சூரத் மற்றும் ஐ.என்.எஸ்., உதயகிரி’ என்ற இரண்டு போர்க் கப்பல்களை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், போர்க் கப்பலை தகர்க்கும் திறனுடைய ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. போர் ஹெலிகாப்டரில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, இலக்கை துல்லியமாக தகர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் அருகே உள்ள கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் சேர்ந்து, இந்திய கடற்படை செய்துள்ளது. போர்க் கப்பல்களை தகர்க்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.