லடாக் எல்லையில் இரண்டாவது பெரிய பாலம் கட்டும் சீனா!

எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம் 2020ல் கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறியதை தொடர்ந்து, அதற்கும், நம் நாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால் போர் மூளும் அபாயம் உருவானது. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான தொடர் பேச்சுக்குப் பின், இரு தரப்பும் படைகளை திரும்ப பெற்றன. ஆனால், சில முக்கிய இடங்களில் இருந்து, இருதரப்பும் படைகளை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை. இருநாட்டு ராணுவமும், 50 ஆயிரம் வீரர்கள் வரை எல்லையில் குவித்துள்ளன. இங்கு ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் இரு நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. நம் எல்லையில் பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள் கட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதே போல, சீன பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரியின் குறுக்கே அந்நாட்டு ராணுவம், மிகப் பெரிய பாலத்தை கட்டி முடித்தது.

இந்நிலையில், சீன ராணுவம் மேலும் ஒரு பாலத்தை தற்போது கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புவி உளவு ஆய்வாளர் டாமியன் சைமன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனா கட்டும் புதிய பாலம் தெளிவாக தெரிகிறது. நம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 20 கி.மீ., தொலைவில் கட்டப்படும் இந்த பாலம், இருபுறங்களில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது. எல்லையில், மிகப் பெரிய ராணுவ வாகனங்கள், படைகளை விரைவில் குவிக்க இந்த பாலத்தை சீனா கட்டி வருவதாக டாமியன் தெரிவித்தார்.

இந்நிலையில் லடாக் எல்லையில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அரிந்தம் பாக்சி, பான்காங் பகுதியில் சீனா கட்டியுள்ள புதிய பாலம் ஏற்கனவே கட்டப்பட்ட முதல் பாலத்தின் விரிவாக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். சீனாவின் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பான்காங் ஏரி பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு உறுதி தான் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லையில் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதையும் அரிந்தம் பாக்சி சுட்டிக் காட்டியுள்ளார்.