பேரறிவாளனை விடுதலை செய்ததில் சதி இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததில் சதி இருக்கிறது என்று ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசுவாமி தொடர்பான சந்தேகங்கள் பல முறை முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சுப்பிரமணியன் சுவாமியுடன் நெருக்கமாக இருந்தவருமான திருச்சி வேலுசாமி, ராஜீவ் காந்தி கொலையில் சுப்பிரமணியன் சுவாமி பங்கு குறித்து கேள்வி எழுப்பி கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நியூஸ் சேனலுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

பேரறிவாளனுக்கு விடுதலை என்பது சிறையில் இருந்துதான்; ஆனால் குற்றத்தில் இருந்து அல்ல. இந்த முறை ஒரு சதி நடந்துள்ளது என நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன என உச்சநீதிமன்றம் நம்முடைய அரசிடம் கேட்டது. இது போல் 3 முறை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை. இதனால் அரசியல் சாசனத்தின் பெரிய அமர்வுக்குதான் உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவே முடிவு செய்திருக்கவும் கூடாது. அதுவும் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது.

ராஜீவ் கொலை வழக்கில் மேலும் 6 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக அரசுக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது. நான் ஏற்கனவே தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்தேன். அப்போது ரத்த ஆறு ஓடும் என்றனர். ஆனால் ஒரு சைக்கிளை கூட உடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் பாஜக என ஒன்று இருக்கிறதா? எங்கேயாவது பேப்பரில் ஒரு அறிக்கை பார்த்திருக்கிறேன். ஏதாவது செய்திருக்கிறார்களா தமிழக பாஜகவினர்? முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட உயரத்துக்கு காரணம் நான். அதை பாஜக செய்யவில்லையே. முத்துராமலிங்க தேவர் சிலையை நான்தான் வைத்தேன்.. பாஜக செய்யவில்லையே. தமிழ்நாட்டில் பாஜக இல்லை. ஜனதா கட்சியில் இருந்து பாஜகவுக்கு போனவர்கள் யாருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. அப்படி போனவர்களை சேர்த்து அவர்களுக்கு தலைமை பதவி கொடுத்தால் தமிழகத்தில் பாஜக வளரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.