பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி

திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் கீழ வீதியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு என்று எதுவும் செய்யவில்லை என்றும், குறிப்பாக நெல் கொள்முதலில் எதுவும் செய்யவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி வருகிறார். சட்டசபையிலேயே தெரியாத மணியன் இங்கே வந்து பேசிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், நெல் கொள்முதல் விவகாரத்தில் தற்போதுள்ள அரசு அளவுக்கு யாருமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் முன்பு எவ்வளவு நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தன. இப்போது அவை எந்தளவு அதிகரித்துள்ளது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். இது மட்டுமன்றி திமுக எதோ பாஜகவிடம் மடிப்பிச்சை கேட்கிறது என்பது போல ஓ.எஸ். மணியின் கூறுகிறார். கருணாநிதி காலத்தில் இருந்தே அனைவரையும் எதிர்த்து வளர்ந்த கட்சி தான் திமுக.

தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்குக் காரணமாக இருந்தவரே நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் ஆனால், அதிமுகவினர் எதோ தாங்கள் தான் காரணம் என்பது போலப் பெருமை கொள்கிறார்கள். அவர்கள் 4 ஆண்டுகளாகத் தீர்மானம் போட்டுவிட்டு சும்மா தான் இருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடி பேரறிவாளனை விடுதலை செய்யக் காரணமானவர் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்குச் சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கத் தான் செய்கிறார்கள். இருப்பினும், தேர்தல் வாக்குறுதியில் ஒரே ஆண்டில் மு.க ஸ்டாலின் நிறைவேற்றிக் காண்பித்துள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.