முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை. பெண் மருத்துவர். இவரது கணவர் ரங்கராஜன். இவர்கள் அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருகின்றனர். இத்தம்பதியின் மகள் ராசி(26) எம்.பி.பி.எஸ் முடித்து அதே கிளினிக்கில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவர் ராசிக்கும்,தொழிலதிபர் அபிஷேக் (27) என்பவருடன் திருமணமாகி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவர் ராசி மருத்துவ மேல் படிப்பில் (MD) சேருவதற்கான நீட் தேர்விற்காக கடந்த 3 மாதங்களாக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பதினைந்து நாட்களாக தனது தாய் வீட்டில் உள்ள 3வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து தீவீரமாக நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவர் ராசியின் அறை கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்த பொழுது மருத்துவர் ராசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை கீழே இறக்கி அவரை பரிசோதித்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கான தயாரிப்பில் ஏற்பட்ட கடினமான மன அழுத்தம் காரணமாக மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.