உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்ய விமான நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசு விதித்துள்ள இந்த தடையால், ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான யூரல் ஏர்லைன்ஸ், ரோசியா ஏர்லைன்ஸ், ரஷ்ய அரசின் ஏரோஃப்ளோட் உள்ளிட்ட நிறுவனங்களால் இங்கிலாந்து விமான நிலையங்களில் உள்ள இறங்கும் இடங்களைப் பயன்படுத்த முடியாது, விற்கவும் முடியாது. ரஷ்யா, உக்ரைன் மீதான காட்டுமிராண்டித் தனத்தைத் தொடரும் வரை, அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடருவோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரூஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து ஏற்கனவே ரஷ்யா விமானங்கள் இங்கிலாந்து வான் பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இப்போது ரஷ்ய விமான நிறுவனங்களால் இங்கு அவர்களுக்கு உள்ள சொத்துக்களையும் விற்க முடியாது. இவற்றின் மதிப்பு 50 மில்லியன் யூரோக்களாக இருக்கும்.
உக்ரைன் மீது போரை தொடங்கிய உடன் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த முதல் நாடு இங்கிலாந்து. சர்வதேச வர்த்தகத்தை ரஷ்யா தொடருவதிலிருந்து கட்டுப்பாடு விதிக்கும் விதமாக இந்த தடையை இங்கிலாந்து போட்டுள்ளது. எனவே உலக நாடுகளுக்கு ரஷ்ய பொருட்களை ஏற்றுமதி செய்வதும், ரஷ்யாவில் செய்ய வேண்டிய இறக்குமதிகளும் பாதிப்படையும். வான் பகுதி மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்குச் சொந்தமான கடற்பகுதியையும் ரஷ்யா பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள் உக்ரைன் போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.