பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கு ஜூன் 20ம் தேதி வரை அவகாசம்!

முக்கியப் பிரமுகர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிடம் இருந்து, ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் வாங்கப்பட்டு, அதன் வாயிலாக நம் நாட்டின் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட பல முக்கியப் பிரமுகர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு அந்த வழக்குகளை விசாரித்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில், நீதிபதிகள் அலோக் ஜோஷி, சந்தீப் ஓபராய் ஆகியோர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, கடந்த பிப்ரவரியில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், பெகாசஸ் விசாரணை ஆணையத்துக்கு ஜூன் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.