பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது காட்டு மிராண்டித்தனம்: கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. திமுக இதனை வரவேற்றுள்ள நிலையில், ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீவிர முயற்சி எடுத்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் எஞ்சி உள்ள 6 பேர் விடுதலைக்காகவும் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைவரும் தமிழகம் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி உயிரிழந்த 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த பொழுது கண்ணீர் ஆறாக போனது போல, தற்பொழுது கொலையாளிகள் விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும் பொழுது இதயத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருகிறது, எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இறப்புக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றவாளி குற்றவாளி தான் கடவுள் ஆக முடியாது என தெரிவித்தார்.

மேலும் சீமான் சொல்வதுபோல முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? துடுக்குத்தனமாக பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும். சீறுவது போல வாயை திறக்கலாம். சீற்றம் வராது காற்றுதான் வரும் எனக் கூறியுள்ளார். மேலும், சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். அவர் பேச்சில் வேடிக்கை மட்டுமின்றி அறியாமையும், பிதற்றலும் இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் உயர்ந்த இடத்தில் சீமான் இல்லை. யார் தியாகி, தியாகி இல்லை என்று அவர் சொல்லக் கூடாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.