என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது: ப.சிதம்பரம்

இந்திய எல்லையில் சீனாவின் புதிய கட்டுமானத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்தும் சாடியுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோசமான சூழலே நிலவி வந்தது. அதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், நிலைமை மேலும் மோசமானது. அதன் பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, நிலைமை சற்று மேம்பட்டது.

இதற்கிடையே லடாக் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியில் ஏற்கனவே சீனா ஒரு பாலத்தைக் கட்டியுள்ள நிலையில், சீன ராணுவம் இப்போது இரண்டாவது பாலத்தைக் கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எல்லையில் பதற்றமான சூழல் ஏற்படும் விளைவாக, படைகளை ஒருங்கிணைக்கவே சீனா இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் கட்டுமானத்தை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாங்காங் ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியில் சீனா பாலம் கட்டுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. இந்தக் கவனமான அறிக்கை இரண்டு எளிய கேள்விகளை எழுப்புகிறதே: அ) பூமி யாருக்கு சொந்தம்? ஆ) ஆக்கிரமிப்பு செய்தது யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கு எப்பொழுது, யார் பதில் சொல்வார்கள்?” என்று பதிவிட்டுள்ளார்,

இந்தியாவில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகவும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “ஒரு நடுத்தரக் குடும்பம் விலை ஏற்றத்தால் படும் பாட்டைக் கணவன்-மனைவியின் சொற்களில் கேளுங்கள். பழம், காய்கறி, பால் வாங்குவதைக் குறைத்துவிட்டோம். மிக முக்கியமான விசேஷம் தவிர புதுத்துணி வாங்குவதில்லை. வெளியூர் செல்வதையும், வெளியில் உண்பதையும் நிறுத்திவிட்டோம். காரைப் பயன்படுத்துவது கட்டுப்படியாகவில்லை. இன்று என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுகிறோம், ஆனால் மூன்றாம் வாரத்திலேயே மூச்சு திணறுகிறது. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நிலை இதுவென்றால், ஏழைக் குடும்பங்களின் நிலை எவ்வளவு அவலமாக இருக்கும் என்று சிந்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.