தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ப. சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர். நான் அவரை மிகவும் இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில் ராகுல்காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். லடாக்கின் பங்கோங்கில் இந்திய எல்லைக்கு அருகே சீனா 2-வது பாலம் கட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பங்கோங்கில் சீனா முதல் பாலம் கட்டியபோது, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என இந்திய அரசு கூறியது. தற்போது 2-வது பாலம் கட்டும்போதும் நிலைமையை கவனித்து வருவதாக கூறியுள்ளது’ என குற்றம் சாட்டி இருந்தார். அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல . ஒரு அச்சுறுத்தும் மற்றும் அடக்கமான பதிலடி பலிக்காது. பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.