பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததின் தொடர்ச்சியாக விலைவாசி உயர்ந்து வந்தது. இந் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6 எனவும் நேற்று குறைத்துள்ளது. இதன்மூலம் விற்பனை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து பேரலுக்கு 20 டாலருக்கு கீழ் வந்தது. அந்த நேரத்தில் மத்திய அரசு, தங்களின் கலால் வரியை உயர்த்திக் கொண்டு, விலை குறைப்பு பலனை மக்களுக்கு வழங்கவில்லை. பிறகு அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதிலும், நடப்பாண்டு ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டவுடன் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலரை தாண்டியது. அந்த நேரத்தில், உபி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் நாடு முழுவதும் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108ம், டீசல் ரூ.100ம் என்ற நிலையில் இருந்தது. இந்த வகையில் 137 நாட்கள் விலையில் மாற்றத்தை செய்யவில்லை.

தேர்தல் முடிந்த பின், மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்த தொடங்கியது. தினமும் 75, 76 காசு என உயர்த்தினர். ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்தது. இதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்தது. அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஏப்ரல் 6ம் தேதிக்கு பின் நேற்று வரை 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரே விலையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், பண வீக்கம் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும்போதிலும், உக்ரைன் போர் காரணமாக பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெரும்பாலான நாடுகளில் பண வீக்கமும், பொருளாதார தள்ளாட்டமும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின்போது கூட மத்திய அரசு கரீப் கல்யாண் திட்டம் உட்பட பல திட்டங்கள் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உலக அளவில் பாராட்டு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவும்போதும், பொருட்கள் சப்ளையில், குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்தபோதும், ப்டஜெட்டில் உர மானியத்துக்காக ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 எனவும் குறைத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விற்பனை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 குறையும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.