பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் நடத்துகிறார் என குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூருவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழையால் பாதித்த பகுதிகளை 2-வது நாளாக நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். நாகவாரா ரிங் ரோடு, தனிச்சந்திரா, ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று காலையில் சென்ற அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மாநகராட்சி நிதி முறைகேடு பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மக்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்களை இழந்து பரிதவிக்கின்றனர். பெங்களூருவில் 7 மந்திரிகள் உள்ளனர். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசுக்கும், மாநகராட்சிக்கும் இடையே பணப்பிரச்சினை இல்லை. ஆனால் மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் முறைகேடு செய்யப்படுகிறது. பெங்களூருவில் நடைபெறும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் தரமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், மாநகராட்சியும், அரசும் என்ன செய்து கொண்டிருந்தது என்று தெரியவில்லை. பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் எடுக்கிறார். பெயரளவுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க வேண்டாம். மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் பெங்களூருவில் மழை பாதிப்புகள் குறித்த தகவல்கள் கூட அரசிடம் இல்லை. அப்படி இருக்கையில் மக்களுக்கு எப்படி இந்த அரசால் நிவாரணம் வழங்க முடியும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இந்நிலையில் கர்நாடகத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள் 15 நாட்கள் விடுமுறை எடுக்க கூடாது என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதையடுத்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மழை பாதித்த பகுதிகள் குறித்தும், நிவாரண வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசித்தார். அப்போது மழையால் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட பொறுப்பு செயலாளா்கள், மாவட்ட கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள், வேளாண்துறை அதிகாரிகள் அடுத்த 3 நாட்கள் கண்டிப்பாக மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு, அதற்கான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அளிக்க வேண்டும். மழையால் வீடுகள் முழுமையாக இடிந்திருந்தால், என்.டி.ஆர்.எப். வழிகாட்டுதலின்படி முழு நிவாரணத்தை வழங்க வேண்டும். மாநிலத்தில் இன்னும் சில மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், அடுத்த 15 நாட்கள் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை. அதிகாரிகள் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் ரூ.728 கோடி இருப்பு உள்ளது. அந்த பணத்தை நிவாரண பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். பயிர்கள் சேதம், கால்நடைகள் உயிர் இழப்பு, தோட்டக்கலைத்துறையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக் உடனடியாக மாவட்ட கலெக்டர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.