இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை: ராகுல்காந்தி

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று ‘இந்தியாவுக்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நான் சில ஐரோப்பிய அதிகாரிகளிடம் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் மாறிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். எதையும் கேட்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்போது (இந்திய அரசிடமிருந்து) என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதை எங்களிடம் அப்படியே தெரிவிக்கின்றனர். எங்களிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படுவதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் என்னிடம் கூறுகின்றனர். நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது’ என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ரஷ்யா – உக்ரைன் போரை போன்றது, இந்தியா – சீனாவுக்கும் இடையிலான போர்; உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உக்ரைன் மண்ணைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் சீனாவும் இந்திய மண்ணை கைப்பற்ற முயற்சிக்கிறது. இந்திய அரசு, இந்தப் பிரச்னையைப் பற்றி பேச விரும்பவில்லை. எந்த குழப்பமும் அங்கு நடக்கவில்லை என்கின்றனர். இந்திய மண்ணில் சீனா அமர்ந்திருக்கிறது; உக்ரைனிலும் அதுபோல் நடக்கிறது. இந்த சிக்கலான சூழ்நிலையை இந்தியா சமாளிக்க வேண்டும். மேலோட்டமாக சிந்திப்பதால் எதுவும் நடக்காது.

காங்கிரஸ் இந்தியாவை மீட்க போராடுகிறது. பாகிஸ்தானில் நடப்பதைபோல இந்தியாவில் மெல்ல மெல்ல நடக்க தொடங்குகிறது. வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துவரும் போதிலும், வெறுப்பு அரசியல் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பா.ஜனதா இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. ஆனால் இப்போது நல்ல இடத்தில் இல்லை. பா.ஜனதாவின் விஷ பிரசாரம் நாட்டை பாதித்துள்ளது. வகுப்புவாத பிரசாரம் மூலம் நாடு முழுவதும் பா.ஜனதா மண்எண்ணெயை ஊற்றி விட்டுள்ளது. தற்போது உள்ள ஒரே ஒரு தீப்பொறி பெரிய பிரச்சினையை உருவாக்கும்.

இந்தியாவில் ஆளும் அரசால், ஒவ்வொரு நிறுவனமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தாக்கப்படுகிறது. ஆளும் பாஜகவும், அதன் சங்பரிவார் அமைப்புகளும் இந்தியாவை புவியியல் அமைப்பாக பார்க்கின்றன; ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவானது மக்களால் ஆனது என்று கருதுகிறது. மோடி அரசில் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சிறு தொழில்கள் அனைத்தும் பாஜக அரசால் தாக்கப்பட்டுள்ளன. அது, பணமதிப்பிழப்பு அல்லது ஜிஎஸ்டி அல்லது விவசாயிகள் சட்டமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு செய்கிறார். வெளிநாட்டு மண்ணில் நாட்டைப் பற்றி அவர் அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதாகும் என பாஜக சாடியுள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் செய்திதொடர்பாளர் கவுரவ் பாட்டியா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பால் இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு செய்கிறார். வெளிநாட்டு மண்ணில் நாட்டைப் பற்றி அவர் அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதாகும்” என சாடினார்.

ராகுல் காந்தி இந்திய வெளியுறவு சேவை பற்றி கருத்து தெரிவிக்கையில், “நான் ஐரோப்பாவை சேர்ந்த சில அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்திய வெளியுறவுச்சேவை முற்றிலும் மாறிவிட்டது. அவர்களை எதையும் கேட்பதில்லை. அவர்கள் திமிரானவர்கள். பேசுவதற்கு இடம் இல்லை என தெரிவித்தனர்” என்று கூறினார். இதற்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதில் அளிக்கையில், ” ஆமாம். இந்திய வெளியுறவு சேவை மாறிவிட்டது. அவர்கள் அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களின் வாதங்களுக்கு பதில் அளிக்கிறார்கள். இது திமிரல்ல. இது நாட்டு நலனை பாதுகாப்பதாகும்” என கூறினார்.