பா.ம.க. ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும் எனவும், தனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் பொதுகுழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.
செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திம்மாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையது. ஆனால் அது ஓட்டுகளாக மாறவில்லை. அதனை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். நாம் கட்சியை தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. பா.ம.க. ஒருமுைறயாவது ஆட்சிக்கு வரவேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தி.மு.க. அடுத்த தேர்தலில் வெற்றி பெறாது. அ.தி.மு.க.வின் காலம் போய்விட்டது. அடுத்ததாக மக்கள் நம் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது:-
பேரறிவாளன் விடுதலை பெற்றதை பா.ம.க. வரவேற்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 19 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேர் ஏற்கனவே இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து உள்ளனர். அதனால் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.