தருமபுர ஆதீனத்தில் இன்று இரவு சர்ச்சைக்குரியதாக மாறிய ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும் எண்ணிக்கையில் கூடுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இறை நம்பிக்கையை தழைக்கச் செய்யவும், சைவ சித்தாந்தத்தை விளக்கவும், மக்களுக்கு ஆன்மீகத் தொண்டுகள் புரியவும், உருவாக்கப்பட்ட மடங்கள் ஆதீனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகத்தொன்மையான ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனம் கருதப்படுகிறது. அதிலிருந்து தருமபுர ஆதீனம் சிவத்திரு.குருஞானசம்பந்தர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் ஏராளமான திருக்கோயில்களும், கல்வி நிறுவனங்களும், நிலங்களும், கட்டிடங்களும் மருத்துவமனைகளும், இன்ன பிற சொத்துக்களும் ஏராளமாக உள்ளன. இந்த ஆதீனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள ஆதீனகர்த்தர்களை அல்லது குருமகாசன்னிதானங்களை ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கிலே சீடர்கள் சுமந்துகொண்டு நகர்வலம் கொண்டுவரும் பாரம்பரியமிக்க நிகழ்ச்சிக்குப் பெயர் பட்டினப்பிரவேசம்.
பதினாறாம் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டுவரும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுர ஆதீன குருமுதல்வரின் குருபூஜை தினத்தில், பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவதாக சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தருமை ஆதீனத்தின் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்க இருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. காலங்காலமாக நடைபெறும் பாரம்பரியம் மிக்க பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி, ஆதீன கர்த்தருக்கு, அவர்தம் சீடர்கள் அகமகிழ்ந்து அளிக்கும் மரியாதை அதை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தது. ஆதினத்தின் பல்லக்கை நானே தோளில் சுமப்பேன் என்று நானும் அறிக்கை விடுத்திருந்தேன். இளம் பாலகனாக இருந்த திருஞானசம்பந்தர் அமர்ந்திருந்த பல்லக்கை, வயது முதிர்ந்த அடியார் திருநாவுக்கரசர் அவர்கள் சுமந்து சென்றது மெய்சிலிர்க்கும் வரலாறு. அப்படிப்பட்ட 500 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்திக் காட்டுவோம் என்று நான் வெளிப்படையான அறிவிப்பினை விட்டிருந்தேன்.
தமிழர்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து சிதைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசு, ஒருதலைப்பட்சமாக இந்தப் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பாரம்பரியங்களை, பண்பாட்டின் அடையாளங்களை, தொன்மைகளை, அதன் பெருமைகளை, அழிப்பதையே தங்கள் திராவிட மாடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய ஆதீனங்களையும், அவர்களின் வழிகாட்டுதலில் இருக்கும் தொண்டர்களையும் பக்தர்களையும் தமிழக அரசு அவமானப்படுத்திவிட்டது.
தமிழ் மொழியையும் தமிழ் சமுதாயத்தையும் தாங்கிப் பிடித்த தருமை ஆதீனத்தின் பல்லக்கை என் தோளில் சுமக்கப்போகிறேன் என்று சொன்ன போதே நான் அதைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதி மகிழ்ந்தேன். மக்களுக்கான ஆயிரக்கனக்கான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நேரத்தில் தன் தவறுகளை, திறமையின்மையை மறைக்க இது போன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எசகுபிசகான முடிவுகளை எவரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்துவிட்டு, எதிர்ப்புகள் வந்தவுடன், எதிர்தரப்பினருடன் சர்ச்சையில் ஈடுபட்டு, மக்களை திசை திருப்புவதே திமுக ஆட்சியின் திராவிட மாடல்.
திராவிடம் என்பது தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர், மற்றும் தமிழர் ஆகியோரின் கூட்டான வாழ்விடத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன் திராவிட மாடலாக தமிழரின் தனித்துவத்தை, தமிழர் அடையாளத்தை, தமிழர் தன்மானத்தை, தமிழர் பாரம்பர்யத்தை, தமிழர் கலாச்சாரத்தை தமிழர் பண்பாட்டை, தமிழர் மேன்மையை, அழித்துவிட்டு அதை திராவிட என்ற பொது பண்பில் அடைக்க நினைக்கிறது. தமிழர் வாழ்வியல் இறை நம்பிக்கையோடு கலந்திருப்பதால், இறை அடியார்கள் அச்சுறுத்தலை, தமிழர் கடவுள் மறுத்தலை கையெடுக்கிறது. இதை இனியும் அனுமதிக்காமல் நம் மரபுகளில் கைவைத்த மாநில அரசுக்கு பாடம் புகட்டுவோம்.
தமிழர் மானம் காக்க, தமிழக பாஜக தலைமை ஏற்று வருகிறது. தாமரைச் சொந்தங்கள் எல்லாம் தங்கள் படை திரட்டி வாருங்கள். சீர்மிகு உறுப்பினர்கள் எல்லாம் சீறும் சிங்கமென சிலிர்தெழுந்து வாருங்கள்.நாளை நாம் அனைவரும் தருமை ஆதீனத்தில் ஒன்று கூடுவோம். சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவத்திரு.குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மையான மடத்தின் தெய்வீக திருவருள் பெற்ற குருமகா சன்னிதானம் அவர்களை தோளில் சுமப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.