சென்னையில் உணவு பொருட்கள் கண்காட்சியை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று பல்லுயிர் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு உணவு பொருட்கள் மற்றும் பல்லுயிர் பெருக்க கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது:-
மண்ணின் ஆரோக்கியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை வடிவமைக்க வேண்டும். இதுதான் நமது மந்திரம். இந்தியாவில் 100 மில்லியன் ஹெக்டேர் பாலைவனமாக உள்ளது. இதில் 26 மில்லியன் ஹெக்டேர் பாலைவனத்தை மீட்டுருவாக்கம் செய்வோம். 29 கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் மண்வள அட்டை மூலம் மண் வளத்தை ஆராய்ந்து, ரசாயனத்தை குறைவாக பயன்படுத்தி பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாற்றுவது மிகவும் முக்கியம். இதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை பெருக்க வேண்டும்.
பழங்கள், மருந்து, ஆற்றல் மற்றும் தொழில் சார்ந்த பொருட்களில்தான் நம் வாழ்க்கை சார்ந்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் நீர், ஆக்சிஜன் உள்பட 3 அம்சங்களை சமநிலைப்படுத்த பல்லுயிர் பெருக்க அதிகாரிகள் திறம்பட பணியாற்ற வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் பாம்பு பிடிக்கும் இருளர் இன மக்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மரபுரீதியான அவர்களுடைய ஆற்றலை அறிவியலுடன் இணைத்தும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரபுரீதியான ஆற்றலை பாதுகாக்க முடியும். இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். பல்லுயிர் பெருக்க மையம் அமைப்பதற்கு நிலம் கொடுத்ததற்காக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.