பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் உண்மை நிலையை ஆய்வு செய்து பார்க்கும்போது, இந்த விலை குறைப்பினால் சில்லரை பணவீக்க அளவில் 0.15 சதவீத அளவில் தான் பயன் தரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது. மத்திய அரசுக்கு மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேரறிவாளன் விடுதலை, தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி அரசியல் ஆகியவை குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
ராஜீவ் காந்தியை கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டனர். ஆனால் மக்களும் ராஜீவ் குடும்பத்தினரை போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் இட்டது. அதேபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6 பேரை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அப்படியானால் 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? இது எல்லாம் தெரிந்துதான் திமுக -காங்கிரஸ் கூட்டணி உருவானது. இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் பாதிக்கவில்லை.
பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரண்டுள்ளோம். மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. ஆனால் அதற்காக கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழக காங்கிரசுக்கு தலைவரான பின்னர் கூட்டணியில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்ததுண்டு. ஆனால் அதை நான் ஒருபோதும் ஊக்கப்படுத்தியதில்லை. அதனால்தான் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸுக்கு 72 சதவீத வெற்றி கிடைத்தது.
கூட்டணி என்பது கட்சியை மேன்மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் காங்கிரசை வளர்ச்சியடைய முடியாமல் செய்துவிட்டன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைத்த கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்திவிட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை பெருக்குவதற்கு மாறாக பாதித்துவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.