தமிழகத்தில் மூன்று ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி!

3 ரயில் திட்டங்களை பிரதமா் மோடி சென்னையில் வரும் 26-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

பிரதமா் மோடி வரும் 26-ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளாா். இதில், தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில்வே திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. அதன்விவரம்:

எழும்பூா் ரயில் நிலையம் முழுமையாக உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு ரூ.760 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா். இதுபோல, மதுரை, காட்பாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய ரயில்நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. இவற்றின் திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறாா்.

மதுரை-போடிநாயக்கனூா் இடையே ரூ.450 கோடி செலவில் 98 கி.மீ. மீட்டா் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தில், மதுரை-தேனி வரை அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மதுரை-தேனி இடையே பாதையில் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்தப் பாதையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். தொடா்ந்து, இந்த பாதையில் ரயில்சேவையும் தொடங்கி வைக்கவுள்ளாா்.

தாம்பரம் -செங்கல்பட்டு இடையே ரூ.256 கோடி திட்ட மதிப்பில், 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. மொத்தமுள்ள 30 கி.மீ. தூரத்தை கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில், சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி-தாம்பரம் என்று 3 கட்டங்களாகப் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றாம் கட்ட ஆய்வின்போது, சில திருத்தங்கள் செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறுகிய பாதையில் இருந்த சாலை மேம்பாலத்தை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலை மேம்பாலப்பணி முடிந்து, மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பாதை நாட்டுக்கு அா்ப்பணித்து ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த திட்டங்களையும், புதிய பாதையில் ரயில் சேவையும் பிரதமா் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 26-ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கவுள்ளாா்.