பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன்: அண்ணாமலை

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அவரது வருகையின் மூலம் தமிழகம் முனைப்பாக முன்னேறும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மறுமலர்ச்சி, கட்டமைப்புக்களில் எழுச்சி, வேலைவாய்ப்புகளில் புரட்சி, மக்கள் நலத்தில் புத்துணர்ச்சி என பல்வேறு துறைகளை சார்ந்த புதிய முன்னேற்ற திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. மத்திய அரசின், தமிழகத்திற்கான தன்னிறைவு திட்டங்கள் ரூ.500 கோடி மதிப்பில் மதுரை-தேனி அகல ரெயில்பாதை, ரூ.500 கோடி மதிப்பில் தாம்பரம்- செங்கல்பட்டு சென்னை புறநகர் ரெயில் 3-வது பாதை மற்றும் 850 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணூர்-செங்கல்பட்டு, திருவள்ளூர்- பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம், 116 கோடி ரூபாய் செலவில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை அர்ப்பணிக்கிறார். ரூ.1,800 கோடியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம்.

பிரதமரின் தொலைநோக்கில் பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன். தன்னிகரற்ற பிரதமர் நரேந்திரமோடி தகுதிமிக்க தலைமையில் தமிழகம் முன்னைவிட முனைப்பாக முன்னேறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.