மாமல்லபுரம் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம்!

மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோயில் செயல் அலுவலரும் சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு நரிக்குறவர்கள், இருளர் சமூகத்தினர் உணவருந்த அனுமதிக்கப்படவில்லை என நரிக்குறவ இனத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் வீடியோவில் பேசியது வைரலானது. இந்த வீடியோ கோட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில் முறையிட்ட அஸ்வினி உள்ளிட்ட பொதுமக்களோடு அமைச்சர் அமர்ந்து உணவருந்தினார். அவர்களுக்கு தீபாவளித் திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

பின்னர் அஸ்வினி என்ற பெண்ணை அழைத்து உங்கள் பகுதியில் ஏதாவது குறைகள் உள்ளதா என கேட்டார். அந்த பெண் எங்கள் பகுதியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் என மொத்தம் 81 குடும்பங்கள் 25 ஆண்டுகளாக மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகிறார்கள். அனைவருக்கும் வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் இல்லை. அதே போல் சாலை வசதியோ, குடிநீர் வசதியோ மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகிறோம் என அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கை வைத்தார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்தப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசியப் பணிகளை செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். அது போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நரிக்குறவ சமூகத்தினரின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு உணவருந்தினார். நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என அவர்கள் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர் அதுகுறித்து பிரதமருக்கு அடுத்த நாளே கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அதே ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கிய போது 9 நரிக்குறவர்களை கீழே அமர வைத்து உணவு பரிமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சட்டசபை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜியின் கவனத்திற்கு சென்றது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கோயில் ஆணையர் குமரகுருபரனுக்கு உத்தரவிட்டார். அவர் விசாரணையில், நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோயில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னியையும் சமையலர் குமாரியையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இனி நரிக்குறவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது, அனைவரையும் சமமாக கருதி மேசையில் அன்னதானம் வழங்க வேண்டும் என எஸ் எஸ் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.