நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமங்கே கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
வரலாறு காணாத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பட்ஜெட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்ற பின்பு பல்வேறு அமைச்சர்கள் பதவி ஏற்றாலும் நிதித் துறைக்கான பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவே நிதித் துறையையும் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது கட்சிக்கே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிய நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க வேண்டுமானால், நிதியமைச்சர் பதவியை தனக்கே வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று நிதியமைச்சராகப் பதவி ஏற்றார்.