தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார்.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஆளும் திமுக அரசும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல் கட்டமாக, ரூ 45 கோடி மதிப்பில் 9000 டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் , 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவற்றுடன் டான் பின்-99 என்ற சரக்குக் கப்பல் அண்மையில் கொழும்பு சென்றடைந்தது. முன்னதாக சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இக்கப்பலை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

இலங்கையை சென்றடைந்த இந்த நிவாரணப் பொருட்களின் ஒருபகுதி ஈழத் தமிழருக்கு வழங்கப்பட உள்ளது. இலங்கையின் வடக்கே உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தம் 20,000 குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணங்கள் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரூபாவதி கேதீஸ்வரன் கூறுகையில், தமிழக அரசின் உணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் 20,000 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைப் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வறுமைக்கு உட்பட்ட, உணவு தேவைப்படுகிற குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.