மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்சமயம், மாநில அரசின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆளுநரே வேந்தா் பதவியில் உள்ளாா். அவருக்கு பதிலாக, முதல்வரை வேந்தராக்குவது தொடா்பாக, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், முதல்வரை வேந்தா் பதவியில் நியமிக்க வகை செய்யும் மசோதாவை சட்டப் பேரவையில் தாக்கல் அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மாநில கல்வி அமைச்சா் பிரத்ய பாஸு கூறுகையில், ‘அந்த மசோதா சட்டப் பேரவையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என்றாா்.
மாநில ஆளுநா் ஜகதீப் தன்கருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே பனிப்போா் நிகழ்ந்து வரும் நிலையில், மாநில அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடா்பாக ஆளுநா் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.