மகாராஷ்டிராவில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று!

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநில அரசு விளக்கம் அளிக்க அறிவுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

‘நாகபுரியில் தலசீமியா (ரத்த சோகை) நோயால் பாதிக்கப்பட்ட 4 சிறாா்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மருத்துவமனையில் நியூக்ளிக் அமில பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால், நோய்த் தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டதில் அவா்களுக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவா்களில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா்’ என்று ஊடகத்தில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் என்ஹெச்ஆா்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக என்ஹெச்ஆா்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ஊடக செய்தியின் அடிப்படையில் இந்த விவகாரத்தை என்ஹெச்ஆா்சி தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசு தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை, தவறிழைத்த அரசு ஊழியா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பாதிக்கப்பட்ட சிறாா்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு விவரம் உள்ளிட்ட விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மாநில உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை செயலருக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ள என்ஹெச்ஆா்சி, இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் முதல்கட்ட விசாரணை விவரங்கள் தொடா்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.