சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நாடாளுமன்ற நெறிக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு வாசலில், ‘அனுமன் சாலிஸா’ பாடல் பாடப் போவதாக, சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் அறிவித்தனர். இவர்களது அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதால், இருவரும் கடந்த 5ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த 9ம் தேதி டெல்லி வந்த அவர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரை சந்தித்து, சிறையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து புகார் மனுவாக அளித்தனர். மேலும் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்ற சிறப்பு உரிமை மற்றும் நெறிமுறைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நவ்நீத் ராணா, லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தினார்.
அதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதி மகாராஷ்டிர தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் மற்றும் மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோர், நாடாளுமன்ற சிறப்பு உரிமைகள் மற்றும் நெறிமுறைக் குழு முன் ஆஜராக வேண்டும் எனக்கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மக்களவையில் செயல்படும் சிறப்பு உரிமைகள் மற்றும் நெறிமுறைகள் பிரிவு அலுவலகத்திற்கு, மகாராஷ்டிரா அரசின் தலைமைச் செயலர் குமார் வஸ்தவா, காவல்துறை இயக்குநர் மற்றும் மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.