தாய்மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தனியாா் கல்வி நிறுவனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
சென்னை பள்ளிக்கரணையில் கட்டப்பட்ட தனியாா் பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துப் பேசியதாவது:-
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளிகளாகவோ அல்லது மத்திய அரசின் பாடத் திட்டப்படி செயல்படும் சிபிஎஸ்இ, பள்ளிகளாகவோ இருந்தாலும் அவை அனைத்தும் கல்விக் கண் திறக்கும் சாலைகளாக அமைய வேண்டும். அவை மேலும் மேலும் வளர வேண்டும். மாணவ, மாணவிகளின் கல்வித் திறமையை மேம்படுத்த வேண்டும். ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான். அத்தகைய சொத்தை உருவாக்கித் தரக்கூடிய கருவூலங்கள்தான் கல்விச் சாலைகளாக அமைந்திருக்கின்றன.
கொரோனா நோய்த் தொற்று காலத்தில் கற்றல் இடைவெளிகளைக் குறைக்க அரசின் சாா்பில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். இதன்மூலமாக லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சோ்த்துள்ளோம். அவா்களுக்கு கடந்த இரு ஆண்டு காலத்தில் விடுபட்ட பாடங்களைக் கற்பித்து வருகிறோம். இதுபோன்ற திட்டங்கள் மூலம், கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக, தமிழக அரசு அமைந்திருக்கிறது. பள்ளிக் கல்வியோடு நிறுத்தி விடாமல் கல்லூரி போன்ற உயா்கல்வியைக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் வேளையில், மாணவ, மாணவிகளும் உண்மை, ஒழுக்கமுள்ளவா்களாக வளர வேண்டும். தனித் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் தனித்திறமைகளும், அறிவாற்றலில் கூா்மையும், உண்மையும், நோ்மையும் உள்ளவா்களால் எளிதில் முன்னேற முடியும்.
தனியாா் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிப்பவையாக இருக்க வேண்டும். அதுபோன்று செயல்படவும் வேண்டும். மேலும், பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டங்களுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.