சீனாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதை தொடர்ந்து, ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலியாகினர்.
சீனாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப்போட்டு விட்டது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின. புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
அதேபோல் புயல் காரணமாக மின்வினியோகம் தடைபட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின. 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை வெள்ளத்தை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புஜியான் மாகாணத்தின் வூப்பிங் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 குடியிருப்பு கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் 8 பேர் பலியாகினர். அதேபோல் யுன்னான் மாகாணத்தின் கியுபே நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. குவாங்சி பிராந்தியத்தின் ஜின்செங் நகரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 பேர் பலியாகினர். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 1,600-க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.