நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அது ஏழை நாடாகவே நீடிக்கிறது. இதனிடையே நைஜீரியாவின் தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், அங்கு இருந்த பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது மற்றொரு சோகமான செய்தியாகும். அங்குள்ள கிங்ஸ் அசெம்பிளி சர்ச் சார்பில் பரிசுகளை நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெரிசல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இடத்திற்கான கேட் மூடப்பட்டிருந்த போதிலும், அங்குக் கூடியிருந்த மக்கள் கூட்டம் அரங்கிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.