கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. அதனைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்று எழுப்பப்பட்டிருக்கும் சிலைக்கு இருக்கும் சிறப்பு என்னவென்றால், தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையிலே நம்முடைய முத்தமிழறிஞர் சிலை அமைந்திருக்கிறது. இது மிகமிக பொருத்தமாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் ஈரோட்டு பள்ளியிலே படித்தவன், பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி கல்லூரியிலே பயின்றவன் என்று கலைஞர் தன்னை பற்றி அடிக்கடி குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அதற்கேற்பவே பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் தலைவர் கலைஞர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், முத்தமிழறிஞர் கலைஞரால் இந்த ஓமந்தூரார் தோட்டத்திலே உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டிடம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடம் இது. தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், அது கம்பீரமாக கலைஞரின் கனவு கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. ஆகவேதான் அவருடைய சிலை எழுப்பப்பட்டுள்ளது.
சிலையை திறந்து வைத்திருக்கக்கூடிய இந்த விழா, நடக்கக்கூடிய இடம் கலைவாணர் அரங்கம். ஒருகாலத்தில் பாலு அரங்கம் என்று இருந்தது. அதனை மிக பிரமாண்டமாக கட்டியெழுப்பி அதற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியவரும், கலைஞர்தான். இத்தகைய சிறப்புகள் கொண்ட விழாவுக்கு மகிழவைப்பதைபோல, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகை தந்து, கலைஞர் சிலையை திறந்து வைத்திருக்கிறார். நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகதான் துணை ஜனாதிபதி எப்போதும் இருந்து வருகிறார்.
துரைமுருகன் குறிப்பிட்டு காட்டியதுபோல, 2001-ம் ஆண்டு தலைவர் கலைஞர் மிக கொடூரமான முறையில் அன்றைய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டபோது, அன்றைக்கு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனும், பிரதமராக இருந்த வாஜ்பாயும் துடிதுடித்து போனார்கள். அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்து, கடுமையாக விமர்சித்தவர்தான், வெங்கையா நாயுடு. அதே நட்பை இன்று வரையிலே பேணிவரக்கூடியவராக தொடர்ந்து இருக்கிறார்.
கலைஞர் சிலையை திறந்துவைக்க யாரை அழைக்கலாம்? என்று நாங்கள் சிந்தித்த நேரத்தில், துணை ஜனாதிபதி முகம்தான் எங்கள் நெஞ்சிலே தோன்றியது. அவரை நேரில் சந்தித்து கேட்டநேரத்தில் மனப்பூர்வமாக அவர் ஒப்புக்கொண்டார். துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, மிக சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்று பெயர் எடுத்தவர். மாநிலங்களவையை கொந்தளிப்பான சூழ்நிலையிலும் திறம்பட கையாண்டவர். எனவேதான் கலைஞர் சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியதற்கு, எத்தகைய திறமை வேண்டும் என்பது துணை ஜனாதிபதிக்கு தெரியும். இன்று தலைவர் கலைஞரின் சிலையை அவர் திறப்பது, மிக மிக சாலப்பொருத்தமாக அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியில் இருக்கும்போது, நம்முடைய தலைவர் சிலையை திறந்து வைத்திருப்பது இன்னும் பெருமைக்குரிய நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது.
எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அந்ததுறையில் கோலோச்சியவர் கலைஞர். இலக்கியமா? எத்தனை? எத்தனை? குறளோவியமும், தொல்காப்பிய பூங்காவும், பொன்னர் சங்கரும் காலத்தால் அழிக்கமுடியாத காப்பியங்கள். திரையுலகமா? இன்றும் பராசக்தி, மனோகரா, பூம்புகார் வசனங்கள் நாட்டிலே ஒலித்துகொண்டுதான் இருக்கிறது. என்னுடைய பாசமிகு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்திருக்கிறார். அவருக்கு நன்கு தெரியும். திரையுலகுக்கு வருபவர்கள் கலைஞரின் வசனத்தை பேசி, அதில் தங்களின் திறமைகளை நிரூபித்து, உள்ளே நுழைந்தவர்கள் என்பது வரலாறு. அரசியலா?. ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பை 50 ஆண்டுகள் ஏற்று வழிநடத்தியவர். ஆட்சியா? இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீன தமிழ்நாடு தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்கு பார்வை, அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அத்தகைய மக்களின் உயர்வுக்காக அவர் எழுதினார், பேசினார், போராட்டம் நடத்தினார். சிறையில் இருந்தார். ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் அவர்களுக்காக திட்டங்களை தீட்டினார். அந்த திட்டங்களால் உருவானதுதான் இந்த தமிழ்நாடு. அதனால்தான் அவரை ‘நவீன தமிழ்நாட்டின் தந்தை’ என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த எத்தனையோ பெருமக்களுக்கு சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்கள் அமைத்தவர் கலைஞர். அவருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது. அண்ணா சாலையில் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்த சிலை ஈடுஇணையில்லாதது. இதே அண்ணாசாலையில் தந்தை பெரியாருடைய விருப்பப்படி திராவிடர் கழகத்தால் முத்தமிழறிஞருக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால் அது சிலரால் கடப்பாரை கொண்டு இடிக்கப்பட்டது. அப்போதும் கலைஞருக்கு கோபம் வரவில்லை. கவிதைதான் வந்தது. எழுதினார், ”உடன்பிறப்பே செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும், அந்த சின்னதம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சிலேதான் குத்துகிறான். அதனால் நான் நிம்மதி. வாழ்க! வாழ்க” என்று எழுதிகாட்டியிருக்கிறார். அதே தலைவர் கலைஞர் கோடிக்கணக்கான தமிழ்மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அப்படி வாழப்போகக்கூடிய தலைவரின் தலைமை தொண்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லக்கூடிய முழக்கம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், வாழ்க! வாழ்க! வாழ்கவே தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே!. இவ்வாறு அவர் பேசினார்.