பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை!

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை அடுத்து ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பஞ்சாப்பின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா (வயது 27). இவர் ஜீப்பில் ஜவகர் கே கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்து உள்ளார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை திரும்ப பெற்ற 2 நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. காங்கிரசில் வளர்ந்து வந்த நல்ல நபரை இழந்து விட்டோம். ஆம் ஆத்மி அரசு தனக்கான நம்பிக்கையை இழந்து விட்டது. பஞ்சாப்பில் அந்த அரசை கலைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாடகர் மூஸ்வாலா படுகொலை கட்சிக்கும் மற்றும் நாடு முழுமைக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். அதிக துயரம் நிறைந்த இந்த தருணத்தில் நாம் ஒற்றுமையுடனும், மனவுறுதியுடனும் நிற்போம் என தெரிவித்து உள்ளது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று முன் தினம் மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட உடனேயே அவர் கொல்லப்பட்டது ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆம் ஆத்மி அரசின் தோல்வியை அம்பலப்படுத்துங்கள் என அவா் பதிவிட்டுள்ளாா்.

இந்தக்கொலை தொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி. வீகே பவ்ரா கூறியதாவது:-

பாடகர் கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். கொலையாளிகள் சுட்டு கொன்றபின்னர் காரில் தப்பி சென்றுள்ளனர். மேலும் கனடாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னாய், பிரார் தாதா கும்பல் பேஸ்புக்கில் சில பதிவுகளில் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல கிரிமினில் வழக்குகள் உள்ளன. 2 பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்தும் பாடகர் பாதுகாவலர் இல்லாமல் சென்றுள்ளார். அவர் தனது புல்லட்புரூப் காரையும் பயன்படுத்தாமல் மாற்று காரில் போயுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு டி.ஜி.பி கூறினார்.