அமெரிக்காவில் 2 படகுகள் மோதல்: 5 பேர் பலி

அமெரிக்காவில் 2 சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை ராணுவ வீரர்களுக்கான நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்கள் ஆகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்க மக்கள் பூங்கா, ஏரி, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொண்டாடித்தீர்ப்பார்கள்.

அந்த வகையில் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த மக்கள் அங்குள்ள வில்மிங்டன் ஆற்றில் படகு சவாரி செய்து விடுமுறையை கொண்டாடினர். மக்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அணி, அணியாக படகுகளில் சவாரி செய்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர் எதிர் திசையில் பயணம் செய்த 2 படகுகள் திடீரென நேருக்கு நேர் மோதின. இதில் 2 படகுகளும் ஆற்றில் கவிழ்ந்து, மூழ்கின.2 படகுகளிலும் பயணம் செய்த 9 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அமெரிக்க கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் மீட்பு பணிகள் நடந்தன. எனினும் இந்த கோர விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.