ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தின் முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசு, இப்போதாவது புதி சட்டம் இயற்றுவது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி தீர்ப்பளித்ததற்கு பிந்தைய 10 மாதங்களில் மட்டும் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முந்தைய அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தில் சில பிழைகள் இருந்தன என்பது உண்மை தான். அதனால் தான் அந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் ரத்து செய்யப்பட்ட சட்டத்தில் உள்ள பிழைகளை சரி செய்து, திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது போன்ற புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஒரு வாரத்திற்குள் வரைவு செய்ய முடியும் என்ற நிலையில், அதை உடனடியாக தயாரித்து அடுத்த இரு வாரங்களில் அவசர சட்டமாக பிறப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.