டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; விமான சேவை முடக்கம்!

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவை முடக்கம். பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு.

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. அதன்பின் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மக்கள், மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. சூறைக்காற்றால் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்தன. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. பிரஹலாத்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இவ்வாறு தேங்கிய தண்ணீரில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். தெற்கு டெல்லி பகுதியில் மற்றொருவர் மழை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அதேநேரம் பலத்த காற்றின் காரணமாக, ஜமா மஸ்ஜித் பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
மஸ்ஜித்தின் குவிமாடம் சேதமடைந்தது. குவிமாடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். இதுகுறித்து டெல்லி ஜமா மஸ்ஜித் ஷாஹி இமாம் சையத் அஹ்மத் புகாரி கூறுகையில், ‘குவிமாடத்தின் இரண்டு பகுதிகள் உடைந்து விழுந்து விட்டன. மற்றொரு பகுதி எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. குவிமாடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்’ என்றார்.

மேலும் பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் கார் மீது மரம் விழுந்ததால், அந்த கார் சேதமடைந்துள்ளது. ரைசினா சாலையில் பலத்த சூறைக்காற்று வீசியதால், போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையும் விழுந்தது. பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், டெல்லியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள நரேலா, பவானா, புராரி, ரோகினி, சிவில் லைன்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின் விநியோகம் தடைபட்டது. மக்கள் வெகுசிரமங்களை சந்தித்தனர். மின் வினியோகத்தை துரித கதியில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால், இன்று காலை அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டெல்லியின் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. முன்னதாக, நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 27.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 8 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த விமானங்கள் ஜெய்ப்பூர், அகமதாபாத், சண்டிகர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கு சென்றன. வானிலை சீரடைந்தவுடன் விமானங்கள் மீண்டும் டெல்லிக்கு வந்தன. டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்களும் சில மணி நேரங்கள் தாமதமாக சென்றன’ என்றனர்.