காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணையவிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜக அல்லது ஆம் ஆத்மியில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணையவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் கடந்த 18ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதற்கு முன்னதாகவே தனது ட்விட்டர் பயோவில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கினார் ஹர்திக் படேல்.
முன்னதாக, மோடியையும், மோடி ஆட்சியையும் புகழ்ந்திருக்கிறார் ஹர்திக் படேல். அயோத்தி தீர்ப்பு, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய விவகாரங்களில் அவர் பாஜக அரசுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். அதேபோல், குஜராத் தேர்தலில் பா.ஜ.க ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்றும் பேசியுள்ளார் ஹர்திக் படேல். இதனால் அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், ஜூன் 2 ஆம் தேதி பாஜகவில் சேரப் போவதாக ஹர்திக் படேல் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில பாஜக தலைவர் பாட்டீல் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இளம் தலைவரான அவருக்கு குஜராத் பாஜகவில் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குஜராத் தேர்தல் குஜராத் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஹர்திக் படேல் பாஜகவில் இணையவிருப்பது பாஜகவிற்கு பலத்தை ஏற்படுத்தும் எனவும், காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.