காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே பிரதானம்: பிரதமர் மோடி

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி கூறினார்.

சிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை இன்று பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10 கோடி விவசாயிகளுக்கு இன்று மொத்தம் 21 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சிம்லாவுக்கும் , எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிம்லா எனது கர்ம பூமி. பல வீர, தீர தியாகங்களை கெண்டது சிம்லா. இங்குள்ள மக்கள் என் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டும். கடந்த 2014ல் நாடு முழுவதும் ஊழலும், கொள்ளையும் பெருகி இருந்தது. இது தான் தலைப்பு செய்தியாக இருந்தது. இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றனர். ஆனால் தற்போது இது தடுக்கப்பபட்டு நாடு வளர்ச்சி நோக்கி செல்கிறது. நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் முக்கிய செய்தியாக இடம்பெறுகிறது. கடந்த ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்தினர். நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுகிறோம்.

கடந்த காலத்தில் முத்தலாக்கை நினைத்து பலரும் அஞ்சி இருந்தனர். நமது எல்லையில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பு மிக சிறப்பாக உள்ளது. ஆதார், ஜன்தன் பணி சிறப்பாக முடித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சியே நமது அரசின் முக்கிய நோக்கம். ஆட்சியும், சேவையும் எங்களுக்கு சமமானது. ஏழைகள் முன்னேற்றத்திற்கான அரசு எங்கள் அரசு. இவ்வாறு மோடி பேசினார்.