இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும். இந்தியாவுடனான ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கை மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பற்றி நாங்கள் அறிவோம். இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.