சண்டிகரில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்சேவாலாவின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பஞ்சாப் பாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்சேவாலா(28) சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். மூஸ்சேவாலா உட்பட மொத்தம் 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு கடந்த சனியன்று விலக்கி கொண்டது. இந்நிலையில், அடுத்த நாளே மூஸ்சேவாலா மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மான்சாவில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் மூஸ்சேவாலா சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூசா கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு மூஸ்சேவாலா உடல் எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், மூஸ்சேவாலா தனது இசைக்கச்சேரிகளில் பயன்படுத்தும் ராசியான டிராக்டரில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், மூஸ்சேவாலாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மூஸ்சேவாலா படுகொலை தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மன்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:-
சித்து மூஸ்சேவாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதலாவது நபராக மன்பிரீத் சிங் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கொலையாளிகளுக்கு வாகனங்கள் கொடுத்து உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். மன்பிரீத் சிங் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின், 5 நாள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும், பதிண்டா, ஃபெரோஸ்பூா் சிறையில் இருந்து தலா ஒருவரை காவல் துறையினா் அழைத்து வந்துள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது என்றாா் அந்த அதிகாரி.